திருச்சி
பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ விழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
|பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சமயபுரம்:
பிரம்மோற்சவ விழா
குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக துணியில் வரையப்பட்ட கருடன் கொடியை மேள தாளங்கள் முழுங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று, கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொடிமரத்தையும், பெருமாள்-தாயாரையும் பயபக்தியுடன் வணங்கினர். இரவில் சாமி புறப்பாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு சுவாமி பல்லக்கிலும், இரவு 7.30 மணிக்கு முறையே அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷவாகனம், யானை வாகனம், போன்ற வாகனங்களிலும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7-ம் நாளான 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 25-ந்தேதி (திங்கட்கிழமை) பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளுகிறார். இதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியை www.gunaseelamtemple.com என்ற இணையதளத்தில் வெளியூரில் இருக்கும் பக்தர்கள் காணும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந்தேதி (புதன்கிழமை) திருமஞ்சனம் மற்றும் முத்தங்கி சேவை நடைபெறுகிறது. 28-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு பெருமாள் புஷ்பப் பல்லக்கில் சேவை சாதிக்கிறார். தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.