நகைக்கடை மோசடி வழக்கு: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்
|நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை
திருச்சியை தலைமையிடமாக கொண்ட பிரணவ் ஜுவல்லர்ஸ், சென்னையில் குரோம்பேட்டை, வேளச்சேரி பினீக்ஸ் மால் ஆகிய இடங்களில் கிளைகள் அமைத்து செயப்படுகிறது. இது தவிர திருச்சி, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் போன்ற இடங்களிலும் இந்த நகைக்கடைக்கு கிளைகள் உள்ளன.
நடிகர்-நடிகைகள் மூலம் இந்த நகைக்கடைக்கு பெரியளவில் விளம்பரம் செய்யப்பட்டது. பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி முதலீட்டு தொகை பெற்றுள்ளனர். மேலும் முதலீட்டு தொகை பெற்று நகைகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வந்தனர்.
பொதுமக்களிடம் முதலீட்டு தொகைக்கு முறையாக வட்டித்தொகை வழங்காமலும், நகை முதலீட்டு திட்டத்திலும் முறையாக நகைகளை பொதுமக்களுக்கு வழங்காமலும் மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. ரூ.100 கோடி அளவில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நகைக்கடை மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து இந்த கடையின் உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகிய 2 பேரையும் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்ததாக அறிவித்தனர்.
இதற்கிடையே சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் பிரணவ் ஜுவல்லரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன் பேரில் கடந்த 20ம் தேதி பிரணவ் ஜுவல்லரி நிறுவனத்திற்கு சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அறிவித்தனர்.
இந்நிலையில் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. அதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் ஓரிரு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.