அடந்த காட்டுப்பகுதியில் ஆம்புலன்சிலேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு குவியும் பாராட்டு
|இரவில் யானைகள் நடமாடும் காட்டில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அருகே கொலஞ்சிமடம் மலை கிராமத்தைச் சேர்ந்த அபிஷா என்ற பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்கேட்டு தகவல் அளித்ததும் மலை கிராமத்திற்கு வந்த108 ஆம்புலன்ஸ், அபிஷாவை ஏற்றி கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.
ஆனால் பாதி வழியிலேயே யானைகள் நடமாட்டம் கொண்ட காட்டுப்பகுதியில் அபிஷாவுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் வாகனத்தை நிறுத்தியதும், உடனிருந்த ஆண் செவியலியர் சுஜின்ராஜ், வலியால் துடித்த அபிஷாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
சில நிமிடங்களில் ஆண் குழந்தை பிறந்ததும் இருவருக்கும் முதலுதவி அளித்துள்ளார். பின்னர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவசர காலத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணிற்கு உதவிய சுஜின்ராஜ் மற்றும் ஓட்டுநர் அஜீஸை கிராம மக்களும், மருத்துவர்களும் பாராட்டினர்.