திண்டுக்கல்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
|திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சிவன்கோவில்களில் பிரேதோஷ வழிபாடு நடந்தது.
பெரியாவுடையார் கோவில்
பிரதோஷத்தையொட்டி பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. அதன்படி பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக சிவபெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பெரியாவுடையார் கோவில், கோதீஸ்வரர் கோவில், தட்டான்குளம் சிவன் கோவில் என அனைத்து சிவன் கோவில்களில் சுவாமி மற்றும் நந்தி பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்
வடமதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுந்தரேசுவரருக்கு திருமஞ்சனம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், பால், தயிர், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
மேலும் சுந்தரேசுவரரின் எதிரே வீற்றிருக்கும் நந்தீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், விளக்கு ஏற்றி நந்தீஸ்வரரை பெண்கள் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆதிசிவன் கோவில்
இதேபோல் திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் உள்ள கற்காம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் காலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.