திருநெல்வேலி
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில்பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டம்
|நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 4 மாத ஊக்கத்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 4 மாத ஊக்கத்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி டாக்டர்கள்
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இங்கு 4½ ஆண்டுகள் படிப்புக்கு பிறகு மாணவர்கள் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
ஊக்கத்தொகை
இதற்காக பயிற்சி டாக்டர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பயிற்சி டாக்டர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்களுக்கு ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பயிற்சி டாக்டர்கள் நேற்று அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் அறையின் முன்பாக தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயிற்சி டாக்டர்கள் 94 பேர் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
நோயாளிகளுக்கு பாதிப்பு இன்றி...
இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் கூறுகையில், ''எங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தியுள்ளோம். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் எங்கள் போராட்டம் அமையும்.
உணவு இடைவேளை நேரத்தில் மட்டும் போராட்டம் நடத்தி உள்ளோம். புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது கருப்பு பேட்ஜ் அணிந்திருப்போம். எங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வரை போராட்டம் தொடரும்'' என்று கூறினர்.
மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 1.30 மணிக்கு முடிந்தது. தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.