தர்மபுரி
விவசாயிகளுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
|தர்மபுரி குண்டல்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பில் பால் உற்பத்தி மற்றும் தொழில் முனைவு மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கான இலவச பயிற்சி நடைபெற்றது. ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கி தொடங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளில் பால் உற்பத்தியை நிலை நிறுத்தவும், பாலின் தரத்தை மேம்படுத்தவும் சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது.
இதை கருத்தில் கொண்டு கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கோடைகாலத்தில் மாட்டு கொட்டகைகளை காற்றோட்டமாக வைக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீரை மாடுகளுக்கு போதுமான அளவில் வழங்க வேண்டும் என்று இந்த பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் கால்நடைகளுக்கு நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த மையத்தில் அமைந்துள்ள அசோலா செயல் விளக்க திடல், மாதிரி தீவன ஆலை, கண்காட்சி கூடம் ஆகியவற்றை பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் பார்வையிட்டனர். பால் உற்பத்தி மற்றும் தொழில் முனைவு வாய்ப்புகள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பயிற்சி கையேடு, கறவை மாடுகளில் பால் உற்பத்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து பானம் ஆகியவை வழங்கப்பட்டன.