பிரபாகரன் உயிருடன் இல்லை - திருநாவுக்கரசர் எம்.பி
|தமிழகத்தில், திமுக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறினார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது. அதனால் எனக்கு கிடைத்த தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை.
அரசியலில் நாகரிகமான விமர்சனம் செய்ய வேண்டும். எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஆளும் கட்சியாக இருந்தாலும், ஒரு சில குறைபாடு இருக்கத்தான் செய்யும். குறைபாடுகளே இல்லாத ஆளுங்கட்சி என்று எதையும் கூற முடியாது. தமிழகத்தில், திமுக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தொகுதி மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமகன் விட்டுச் சென்ற பணிகளை இளங்கோவன் தொடர்வார். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.