< Back
மாநில செய்திகள்
விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்
திருப்பூர்
மாநில செய்திகள்

விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்

தினத்தந்தி
|
8 Aug 2022 5:34 PM GMT

விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.


விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

மின்கட்டண உயர்வு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் விசைத்தறி தொழில் கடந்த 6 ஆண்டுகளாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, கொரோனா தொற்று பரவல், நூல் விலை அபரிமிதமான உயர்வு, துணிக்கு போதிய விலை கிடைக்காததால் பாதி உற்பத்தி தான் நடக்கிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் இரும்பு எடைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறியாளர்களும், தொழிலாளர்களும் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். தங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் 32 சதவீதம் மின்கட்டண உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த உயர்வானது நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலை முற்றிலும் முடங்கும் வகையில் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை உருவாகும். விசைத்தறியாளர்கள், விசைத்தறி தொழிலாளர் குடும்பத்தினர் வாழ்வாதாரம் காக்க, அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை ரத்து செய்ய முதல்-அமைச்சர், மின்சார துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

சிம் கார்டு விற்பனை

திருப்பூர் மாவட்ட செல்லுலார் சங்கத்தினர் அளித்த மனுவில், 'சாலையோரங்களில் தொடர்ந்து சிம்கார்டுகளை விற்பனை செய்து வருகிறார்கள். மாவட்டத்தில் பல்வேறு மாநிலத்தவரும், பலதரப்பட்ட வெளிநாட்டினரும் நமது மக்களுடன் கலந்து பணியாற்றி வருகிறார்கள். சாலையோர சிம்கார்டு விற்பனையால் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினர், சிம்கார்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை மாற்றி சிம்கார்டுகளை வழங்குகிறார்கள். இது நமது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் தீங்கு விளைவிப்பதாக அமையும். எனவே சாலையோர சிம்கார்டு விற்பனையை உடனடியாக நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்