சேலம்
ஓமலூரில் மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
|தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ஓமலூரில் மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
ஓமலூர்:-
மத்திய அரசு மின்சார துறையை தனியாருக்கு விற்பனை செய்யும் மசோதாவை எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியது. அதே நேரத்தில் நேற்று காலை ஓமலூரில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு போராட்டம் செய்கிறார்களா? என பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஓமலூர் உதவி பொறியாளரிடம் கேட்டபோது, 'ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் ஓமலூர் நகரில் ஏதோ ஒரு பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் மின்சாரம் வழங்கப்படும். போராட்டத்திற்கும் மின்சார தடைக்கும் தொடர்பில்லை. மின்சாரத்தை துண்டித்துவிட்டு யாரும் போராட்டம் நடத்தவில்லை' என்றார். இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து மின்சார வினியோகம் சீரானது.