சென்னை
மின்கம்பம் முறிந்து விழுந்து சாவு: புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற மர்மநபர்கள் - மாந்திரீகத்திற்காக கொண்டு சென்றார்களா?
|சித்தாமூர் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை மர்மநபர்கள் துண்டித்து எடுத்து சென்றுள்ளனர். மாந்திரீகத்திற்காக கொண்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சித்திரவாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகள் கிருத்திகா (வயது 12). இவர், அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது தெரு விளக்கு மாற்றுவதற்காக மின் ஊழியர் கலைச்செல்வன் (20) மின் கம்பத்தின் மீது ஏறினார். அப்போது சேதம் அடைந்திருந்த மின்கம்பம் முறிந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த கிருத்திகா மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி கிருத்திகா சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ந் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் சித்திரவாடி மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள், மயானத்தில் கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை பழம், மஞ்சள்தூள், குங்குமம், தலைமுடிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருத்திகாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து சித்தாமூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். அப்போது கிருத்திகாவின் தலை துண்டித்து எடுத்து செல்லப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடலை கைப்பற்றிய போலீசார் மறு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் என்பதாலும், கிருத்திகா அவரது வீட்டுக்கு மூத்த மகள் என்பதாலும் மாந்திரீகத்துக்காக மர்மநபர்கள் அவரது தலையை துண்டித்து எடுத்து சென்றார்களா? தலையை துண்டித்து எடுத்து சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.