நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிப்பு - பொதுமக்கள் அவதி
|நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை,
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே நாமக்கல் நகரில் இன்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தநிலையில் மாலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. இரவு 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் ராசிபுரம், பட்டணம், கலரம்பள்ளி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்சார துண்டிப்பு காரணமாக பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.