நீலகிரி
மின்கம்பம் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு
|நடுவட்டத்தில் பலத்த மழை காரணமாக வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கூடலூர்
நடுவட்டத்தில் பலத்த மழை காரணமாக வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்கம்பம் விழுந்தது
கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தினமும் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. நடுவட்டம் அருகே 16-ம் மைல் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்தது. மேலும் மின்கம்பமும் சாய்ந்து தொழிலாளர் குடியிருப்புகள் மீது விழுந்தது.
இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இருளில் வசித்து வருகின்றனர். இதுவரை மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளும் சம்பந்தப்பட்ட துறையினரால் சீரமைக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். நேற்று மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால், எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே, மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின்கம்பத்தை சீரமைத்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண் சரிவு
இதேபோல் கூடலூர் தாலுகா தேவாலா அருகே அம்பலக்கொல்லி பகுதியில் மழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் உள்பட சிலரது வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காலை நேரத்தில் மிதமான வெயிலும், தொடர்ந்து மதிய வேளைக்குப் பிறகு பரவலாக மழை பெய்வதால் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.