சேலம்
கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
|கோனேரிப்பட்டி ஊராட்சி கோட்டை கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தேவூர்:-
மேட்டூரை அடுத்து செக்கானூர் நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஒவ்வொரு மின் நிலையங்களிலும் 2 எந்திரங்கள் அமைக்கப்பட்டு தலா 15 மெகாவாட் என 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடிக்குள் தண்ணீர் வெளியேற்றப்பட்டால் மட்டுமே கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி எந்திரம் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தண்ணீரை செலுத்தி மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 83 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை அப்படியே கதவணை கதவுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக கோனேரிப்பட்டி மற்றும் ஊராட்சி கோட்டை நீர்மின்தேக்க நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடிக்கு கீழ் தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்
தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி மதிக்கிழான் திட்டு, மணக்காடு பகுதிகளில் உள்ள சாலையை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அந்த பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, கரும்பு சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சென்றது. இதேபோல் அண்ணமார் கோவில் பகுதியில் சரபங்கா நதி காவிரி ஆற்றில் கலக்கும் இடத்தில் தென்னை வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அங்குள்ள விவசாய கிணறு, சுடுகாடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பெருக்கெடுத்து சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.