திருவாரூர்
நன்னிலம் அரசு கல்லூரியில் மின் இணைப்பு துண்டிப்பு
|நன்னிலம் அரசு கல்லூரியில் மின் இணைப்பு துண்டிப்பு
17 மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாததால் நன்னிலம் அரசு கல்லூரியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று மதியம் 3 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடந்தது. அதன்பிறகு விடுமுறை விடப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் உறுப்பு கல்லூரி இயங்கி வந்தது. கடந்த ஆண்டு இந்த கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை என 2300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் கடந்த 17 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மின்வாரிய அதிகாரிகள் நேற்று காலை கல்லூரிக்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
மாணவ-மாணவிகள் அவதி
ஒரு வாரம் விடுமுறையில் இருந்த மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரிக்கு வந்தனர். அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சரியாக படிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை. எனவே இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
3 மணி நேரம் மட்டுமே வகுப்புகள்
இந்த கல்லூரியில் காலை, மாலை என இரண்டு பிரிவாக சுழற்சி முறையில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் காலை வகுப்புகள் வழக்கம்போல் நடந்தது.
மதியம் மாணவ-மாணவிகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடந்தது. அதன் பின்னர் விடுமுறை விடப்பட்டது.