ராமநாதபுரம்
ஆபத்தான நிலையில் உயர் அழுத்த மின் கம்பங்கள்
|மானாங்குடி ஊராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் அழுத்த மின்கம்பங்களை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனைக்குளம்,
மானாங்குடி ஊராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் அழுத்த மின்கம்பங்களை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சம்
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிகமான கிராமங்கள் உள்ளன. 28 ஊராட்சிகளை கொண்ட இந்த யூனியனில் அதிகமான கடற்கரை பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் அனைத்தும் சேதமாகி நீண்டகாலமாக மின்சார துறையினர் மின்கம்பங்களை மாற்றாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகமான மின் கம்பங்கள் சேதம் அடைந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மெயின் சாலையில் அதிவேகம் கொண்ட மின்சார கம்பங்கள் நடப்பட்டு உள்ளன.
இந்த பழுதடைந்த மின் கம்பங்கள் அனைத்தும் மாற்றப் படாமல் ஆபத்தான நிலையில் உள்ளதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்துடன் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து மானாங்குடி கிராம செயலாளர் பத்மநாதன் கூறியதாவது:- எங்கள் கிராமத்தின் பகுதியில் அதிகமான மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன.
சேதம்
குறிப்பாக விவசாயம் செய்து வரக்கூடிய பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள அதிவேகம் கொண்ட மின்சாரம் செல்லக்கூடிய மின் கம்பங்கள் முழுமையாக சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.
இது சம்பந்தமாக பல முறை மின்சார துறை அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை வைத்தும் அதற்கான ஆதாரங்களை கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மின்சார துறையினர் செய்து தர முன்வரவில்லை.
நடவடிக்கை
இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் பெரும் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட தலைமை மின் பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.