< Back
மாநில செய்திகள்
பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
30 Dec 2022 12:28 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெண்ணந்தூர் சுற்றுவட்டாரத்தில் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெண்ணந்தூர்

பொங்கல் பண்டிகை

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை தை மாதத்திலும், காளிப்பட்டி கந்தசாமி பண்டிகையையும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் இந்தத் திருநாளை கரும்பு, இனிப்பு பொங்கலுடன் கொண்டாடி மகிழ்வா்.

இதுமட்டுமின்றி, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அதன்பின் உழவா் திருநாளும் கொண்டாடப்படுகிறது. மேலும் வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நாமக்கல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகர் பக்தர்கள் காளிப்பட்டி கந்தசாமி தை மாத பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றார்கள்.

மண் பானை, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு உள்ளிட்டவை பொங்கல் அன்று முக்கிய பங்கு வகிக்கும். அன்றைய தினம் மண்பானையில் பொங்கல் வைத்து மக்கள் சூரிய வழிபாட்டை மேற்கொள்வா். நகா்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புற மக்கள் அதிக உற்சாகத்துடன் இவ்விழாவை கொண்டாடுவா்.

மண் பானைகள்

பொங்கல் திருநாள் நெருங்குவதால், வெண்ணந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளா்கள் பானை உற்பத்தியை அதிகரித்துள்ளனா். இந்த வகையில் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நடுப்பட்டி, சவுதாபுரம், அத்தனூர், உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சவுதாபுரம் பகுதியில் மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோா் கூறியதாவது;-

சவுதாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட களிமண் கட்டிகளை உடைத்து, அதனுடன் குறிப்பிட்ட அளவு மணல் சேர்த்து தூளாக்கி பசை போன்று பதத்துக்கு வரும் வரை, ஒரு நாள் பதப்படுத்தி, மண் கலவையை உருவாக்குகிறோம். அதன்பின்னா் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரத்தில் அவற்றை சுழலவிட்டு பானை தயாரிக்கப்படுகிறது. அந்த பச்சைப்பானையை உலர வைத்து, சிறிய அளவில் சூளை மூட்டி சுட்ட பிறகு, வா்ணம் பூசி வெயிலில் காய வைப்போம்.

தொடா்ந்து அவற்றை உள்ளுா் சந்தைகளுக்கும், வெளியூா்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைப்போம். இந்த பானைகளை, நாமக்கல், ராசிபுரம், ஆட்டையாம்பட்டி ஆகிய ஊா்களில் இருந்தும், சேலம், கரூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனா்.

விற்பனை அதிகரிக்கும்

தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 பானைகள் தயாரிக்கிறோம். ஒரு பானை தயாரிக்க ஒருவருக்கு 30 நிமிடம் ஆகும். பின்னா் அவற்றை உலா்த்தி சூளையிட்டு முழுமை பெற ஒரு நாளாகிவிடும். அளவில் பெரிய பானை ஒரு வாரத்திற்கு 30 செய்கிறோம். அளவில் சிறிய பானை ஒரு வாரத்திற்கு 50 செய்து வருகிறோம்.

இதில் 5 படி அளவு பானை ரூ.150-க்கும், 3 படி அளவு பானை ரூ.100-க்கும், 2 படி அளவு பானை ரூ.75-க்கும் மற்ற சிறிய அளவு பானைகள் ரூ.50 வீதம் என விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என என எதிா்பார்க்கிறோம். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் வரும் தைப்பொங்கல் மற்றும் காளிப்பட்டி பண்டிகை நாட்களில் பானை விற்பனை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்