மிக்ஜம் புயல் எதிரொலி; 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு..!
|வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிலைமை சீரானவுடன் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளதாகவும், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 11-ந்தேதி ஆரம்பித்து நடத்தப்பட இருப்பதாகவும் தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றுவிட்டது. இதனால் குடியிருப்புகளில் இருக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நிவாரண முகாம்களாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டும், மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாலும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிலைமை சீரானவுடன் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.