பெரம்பலூர்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக வாயிற்கூட்டம்
|முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக வாயிற்கூட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காலை பணிக்கு செல்வதற்கு முன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மணிவாசகனின் வழிகாட்டுதலின்படி, அக்கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் பழனிவேலன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ஜனராமன், முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விரைந்து அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் அமைப்பு செயலாளர் மணி நன்றி கூறினார்.