தேனி
விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
|தேனி மாவட்டத்தில் நடிகர் விஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் பிறந்தநாள் நேற்று அவருடைய ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சமீபத்தில் அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் கல்வி விருது வழங்கி, மாணவ, மாணவிகள் மத்தியில் பேசிய பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். அதில் தேனி நகரில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்தும், அவர் முதல்-அமைச்சர் ஆனால் நடக்கும் மாற்றங்கள் குறித்தும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அரசியல் கட்சிகளை அழைக்கும் வகையிலும் பரபரப்பான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஒரு போஸ்டரில், தளபதியின் தலைமையில் ஆட்சி அமைக்க கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் அமைப்புகளே தயாரா?' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மற்றொரு போஸ்டரில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டு, 'தளபதி ஜோசப் விஜய் நாளைய தமிழக மக்களின் முதல்வராக வருக.. நல்லாட்சி தருக.. என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதேபோல் பெரியகுளம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர்களால் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.