திண்டுக்கல்
வத்தலக்குண்டுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள்
|வத்தலக்குண்டுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒற்றை தலைமை விவகாரத்தால், அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாறிமாறி போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பஸ் நிலையம், காளியம்மன் கோவில் பகுதி, கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகளின் பெயர்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கைகாட்டிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வத்தலக்குண்டு பகுதி அ.தி.மு.க.வினர் உள்ளனர் என்றும், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்களால், வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.