நந்தினி அக்கா அவிங்கள முடிச்சுறு...! ஐஸ்வர்யா ராய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!
|பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் வெளியாகி உள்ளது.
சென்னை
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் ,ஜெயம் ரவி ,கார்த்தி மற்றும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி உள்ளது.
முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தில் சோழ அரசை பழிவாங்கும் வெறியை காட்சிக்கு காட்சி கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் ஐஸ்வர்யா ராய். அவர் பேசும் வசனங்களாகட்டும், அலட்சியம் கலந்த பார்வையாகட்டும், காதலை சொல்லத்துடிப்பதாகட்டும் எல்லாமே அடேங்கப்பா ரகம்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம் மதுரை மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பகை மாறா பாண்டியரின் வாரிசுகள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா! பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கையே, கடைசி ஆயுதமே என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
உலகின் முதல் பெண் பாண்டிய அரசியான மீனாட்சி அம்மனோட அருளாசியோட நம்மலயே சீண்டி பாத்த சோழர்கள் இனிமேல் நம்மபக்கம் தலை வச்சு கூட படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சுறு.. என்றும் பாண்டிய வாரிசாகவே பிறக்க விரும்பும் என குறிப்பிட்டு பகை மறவாபாண்டியரின் வாரிசுகள் என்று அச்சிடப்பட்டு மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் -1 வெளியான போதும் இதே போன்று வித்தியாசமான வசனத்துடன் பகைமறவா பாண்டியன் வாரிசுகள் என்ற பெயரில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.