< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அஞ்சல் கோட்ட தபால் நிலையங்களில் தங்கப்பத்திரங்கள் விற்பனை நாளை தொடங்குகிறது
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அஞ்சல் கோட்ட தபால் நிலையங்களில் தங்கப்பத்திரங்கள் விற்பனை நாளை தொடங்குகிறது

தினத்தந்தி
|
18 Jun 2023 12:30 AM IST

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தர்மபுரி தலைமை தபால் நிலையம் மற்றும் 30 துணை தபால் நிலையங்களில் தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். தங்கப்பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு ஒவ்வொரு 6 மாத காலத்திற்கும் ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இது தங்கப்பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும்.

இந்த திட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை தர்மபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும். தபால் நிலையங்களில் தங்கப்பத்திரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும்.

சுமார் 15 நாட்களுக்கு பிறகு தங்கப்பத்திரம் வழங்கப்படும்.இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு அவசியம். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்