< Back
மாநில செய்திகள்
ஆபத்தான கட்டிடத்தில் தபால் அலுவலகம்
திருப்பூர்
மாநில செய்திகள்

ஆபத்தான கட்டிடத்தில் தபால் அலுவலகம்

தினத்தந்தி
|
20 Nov 2022 12:34 AM IST

அவினாசி அருகே பெரியாயிபாளையத்தில் உள்ள தபால் நிலையம், ஆபத்தான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அவினாசி அருகே பெரியாயிபாளையத்தில் உள்ள தபால் நிலையம், ஆபத்தான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தபால் நிலையம்

செல்போன், கணினி வசதி இல்லாத காலகட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாக தபால் நிலையம் இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் தபால் நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல குறைந்து வரும் நிலையில் அதை சரிசெய்யும் வகையில் தபால் நிலையத்தில் பல்வேறு வகையான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் பல தபால் நிலைய கட்டிடங்கள் பராமரிப்பின்றி இருப்பது தபால் நிலையத்தின் மதிப்பை மேலும் குறைக்கும் வகையில் உள்ளது. அந்த வகையில் அவினாசி தாலுகாவிற்குட்பட்ட பெரியாயிபாளையத்தில் உள்ள கிளை தபால் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இப்ப விழுமோ...எப்ப விழுமோ..?

இந்த கட்டிடத்தின் மேற்கூரையானது சாய்ந்து போய் எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய நிலையில் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, ஆர்.டி, பகுதி கால சேமிப்பு (டேர்ம் டெபாசிட்), செல்வ மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்சு, தபால் சேவை, விரைவு தபால், பார்சல் உள்பட பல்வேறு வகையான சேவைகள் இங்கு உள்ளது. இதேபோல் இங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் வங்கி வசதியும் இல்லாத காரணத்தால் இந்த தபால் நிலையத்திற்கு அதிக அளவிலான மக்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தபால் நிலையத்தின் மேற்கூரையானது இப்ப விழுமோ...எப்ப விழுமோ..? என்ற வகையில் சாய்ந்து நிற்பதால் இங்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதேபோல், தபால் நிலைய கட்டிடமும் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் உள்ளே இருப்பவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

ஆள் பற்றாக்குறை

இதன்காரணமாக தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் திக்..திக்..என்ற மனநிலையுடன் தபால் சேவைக்காக காத்து நிற்கின்றனர். இது ஒருபுறமிருக்க, தபால் நிலையத்தில் தபால் ஊழியர், அஞ்சல் அதிகாரி என இரண்டு பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் இதுவரை தபால் ஊழியர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்குள்ள தபால் அதிகாரியே தபால் ஊழியருக்கான பணியையும் சேர்த்து கவனித்து வருகிறார். இதனால் அவருக்கு பணி சுமை ஏற்படுவது ஒருபுறமிருக்க, அவர் தபால் வினியோகம் செய்ய செல்லும் நேரங்களில் தபால் நிலையம் பூட்டப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தபால் சேவை பாதிக்கப்படுகிறது. எனவே தபால் நிலையத்தில் தபால் ஊழியரை நியமிப்பதற்கும், தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்