கொரோனா தொற்றுக்கு பிறகு பி.எஸ்சி. கணித பட்டப்படிப்பில் குறையும் மாணவர் சேர்க்கை..!!
|கொரோனா தொற்றுக்கு பிறகு பி.எஸ்சி. கணிதப் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும், என்ஜினீயரிங் மீதான ஆர்வம் காரணமாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை,
கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு, கல்வி சூழலில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது. மாணவர் சேர்க்கை, தேர்வு, வளாக நேர்காணல் போன்றவை வழக்கமாக நடைபெற தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்னர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பார்க்கும் போது, பி.எஸ்சி. கணித பட்டப் படிப்பில் குறைந்த அளவிலான மாணவர் சேர்க்கை இருப்பது தெரிய வந்துள்ளது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், விரைவில் கணித ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் செயல்திறனை மிகவும் பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
5 ஆண்டுகளில்...
கடந்த 5 ஆண்டுகளில் சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பி.எஸ்சி கணித படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பி.சி.ஏ., பி.எஸ்சி கணினி அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை முறையே 47 சதவீதம், 31 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், 2 ஷிப்டுகளில் நடக்கும் கல்லூரிகளில் சிலவற்றில் பி.எஸ்சி கணித திட்டத்தை 2-வது ஷிப்ட்டில் நிறுத்திவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சில கல்லூரிகள் அந்த பாடத்திட்டத்தில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை நிரப்புவதற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
காரணம் என்ன?
இளங்கலை கணித பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு, என்ஜினீயரிங் மீதான ஆர்வம், அப்ளிகேஷன் சார்ந்த படிப்புகளின் மீதான விருப்பம், நோய்த் தொற்றுகளின் போது ஏற்பட்ட கற்றல் இடைவெளி, கணிதத்தில் தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவை நிபுணர்கள் தரப்பில் காரணமாக சொல்லப்படுகிறது.