மதுரை
பரமக்குடி தபால் பிரிப்பக பணிகளை நிறுத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
|மதுரை கோட்ட ஆர்.எம்.எஸ். அலுவலகத்தின் கட்டுப் பாட்டில் உள்ள பரமக்குடி தபால்பிரிப்பக பணிகளை நிறுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு உள்ளது.
மதுரை கோட்ட ஆர்.எம்.எஸ். அலுவலகத்தின் கட்டுப் பாட்டில் உள்ள பரமக்குடி தபால்பிரிப்பக பணிகளை நிறுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு உள்ளது.
தனியார்மயம்
அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு மத்திய அரசு அலுவலர்கள் சங்கங்கள், வங்கிப் பணியாளர்கள் கூட்டமைப்பு, இன்சூரன்சு நிறுவன பணியாளர்களின் கூட்டமைப்பு, ரெயில்வே தொழிற் சங்கங்கள் ஆகியன கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தபால்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தபால்துறை பணியாளர்கள் சங்கங்களின் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தற்போது தபால் சேவையை முடக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.
பரமக்குடி
தபால்துறை இயக்குனரகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பரமக்குடி உள்ளிட்ட 99 தபால் பிரிப்பு அலுவலகங்களை அதனுடன் தொடர்புடைய ஸ்பீடு தபால்கள் கையாளும் அலுவலகத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் தர்மபுரி, உதகமண்டலம், பொள்ளாச்சி, அரக்கோணம், கும்பகோணம், திண்டிவனம், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், பரமக்குடி ஆகிய 11 தபால் பிரிப்பகங்கள் மூடப்பட உள்ளன.
இதில், மதுரை ஆர்.எம்.எஸ். அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரமக்குடி தபால் பிரிப்பக அலுவலகம் 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அலுவலகம் பரமக்குடி ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகியவற்றுக்கு அருகில் தபால் பைகளை வாங்குவதற்கும், பிரித்து அனுப்புவதற்கும் வசதியாக ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகியன ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது, மாவட்டத்தின் மையப்பகுதி மற்றும் தபால் போக்குவரத்துக்கு வசதியாக பரமக்குடி தேர்வு செய்யப்பட்டு இங்கு தபால் பிரிப்பு சேவைகள் கடந்த 38 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் தபால் கோட்டத்தின் கீழ் 59 துணை தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.
ஒரே நாளில் பட்டுவாடா
இதில் 19 தபால் அலுவலகங்கள் பரமக்குடி உப கோட்டத்தின் கீழும், 40 தபால் அலுவலகங்கள் ராமநாதபுரம் உப கோட்டத்தின் கீழும் இயங்கி வருகின்றன. ஆனால், பரமக்குடி தபால் பிரிப்பக அலுவலகம் மூலம் மட்டுமே தபால் பைகளை பிரித்து அனுப்பும் பணியை மேற்கொள்ள முடியும். இங்கு தற்போது 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு 2500- க்கும் மேற்பட்ட பதிவு தபால்கள் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதாரண தபால்கள் கையாளப்படுகின்றன. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் ஒரேநாளில் தமிழகத்தின் அனைத்து மூலைமுடுக்குகளையும் சென்றடைகிறது.
பரமக்குடி தபால் பிரிப்பு அலுவலகம் ராமேசுவரத்தின் மேற்குபகுதியான விருதுநகர் மாவட்ட எல்லை வரையிலும், தெற்குபகுதி தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லை வரையிலும், வடக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை வரையுள்ள தபால் அலுவலகங்களின் தபால்களை கையாள்கிறது. இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் ஸ்பீடு தபால்கள் அனைத்தும் மதுரைக்கு சென்று அங்கிருந்து பரமக்குடி வந்து பொதுமக்களுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது.
கைவிட வேண்டும்
அதற்கு பதிலாக பரமக்குடி தபால் பிரிப்பகத்தில் பிரிக்கப்பட்டால், மறுநாளே அனைத்து தபால்களும் பட்டுவாடா செய்யப்படும். இந்த நிலையில், தற்போது பதிவு தபால்களையும் மதுரை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் தபால்கள் பொதுமக்களுக்கு சென்றடைவில் தேவையற்ற காலதாமதம் ஏற்படும். இதனால் தபால்கள் தேங்கும் அபாயம் உள்ளது. ஸ்பீடு தபால் சேவைக்கு விதிப்பதை போல பதிவுத்தபாலுக்கும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஆகும் கூடுதல் செலவு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.
பொதுமக்களுக்கான சேவையை சீரழிக்கும் இந்த திட்டத்தை தபால் துறை இயக்குனரகம் கைவிட வேண்டும். அத்துடன், ஸ்பீடு போஸ்ட் (விரைவு தபால்) மற்றும் பதிவு தபால் ஆகியவற்றை அந்தந்த மாவட்டத்தின் தபால் பிரிப்பகங்களில் பிரித்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.