< Back
மாநில செய்திகள்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து முற்றுகை போராட்டம்
திருப்பூர்
மாநில செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து முற்றுகை போராட்டம்

தினத்தந்தி
|
26 Jun 2023 10:26 PM IST

தாராபுரத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட நிர்வாக செயற் பொறியாளர் ராணி, தாசில்தார்கள் (தாராபுரம்) ஜெகஜோதி (காங்கயம்), புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு;-

சீரான மின் வினியோகம்

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் எ.காளிமுத்து:-

நஞ்சம்பாளையம் மற்றும் தாராபுரம் புறநகர் பகுதியில் குறைந்த அழுத்த மின் வினியோகம் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். பி.ஏ.பி. வாய்க்காலில் கோவிந்தாபுரம் பகுதியில் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல வாய்க்காலை தூர்வார வேண்டும். அதேபோன்று அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆர்.டி.ஓ (பொறுப்பு) ரவிச்சந்திரன்:- விவசாயிகளின் கோரிக்கைகளை கூடிய விரைவில் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுகாதார சீர்கேடு

உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி:-

கோவிந்தாபுரம் அருகே தனிநபர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். அவை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநிலத் தலைவர் காளிமுத்து:-

தாராபுரம் அமராவதி ரவுண்டானாவில் இருந்து பூக்கடை கார்னர் வரை இருபுறமும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் தனியார் கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்துக்கு பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அப்பகுதியில் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் அவர்களுக்கு செல்ல போக்குவரத்து இடையூறாக உள்ளது.

இதை கண்டித்து கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

முற்றுகை போராட்டம்

இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

கூட்டத்தில் மின்வாரிய அலுவலர்கள், நகராட்சி அதிகாரிகள், தோட்டக்கலை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் சுப்பிரமணி, இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார், நகர தலைவர் ராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்