< Back
மாநில செய்திகள்
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!
மாநில செய்திகள்

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!

தினத்தந்தி
|
7 Oct 2023 10:53 AM IST

அடுத்த 10 ஆண்டுகளுக்கு டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படுவதாக காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னை,

காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுத்தி தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொண்ட வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் கோர்ட்டு காவலில் வைக்கப்பட்டார். டி.டி.எப். வாசனுக்கு கோர்ட்டு காவல் கடந்த 4-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு கோர்ட்டு, டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை பலமுறை நிராகரித்தது. இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் டிடிஎப் வாசன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும், அவரது பைக்கை எரித்து விடலாம் என காட்டமாக கூறி டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.

அதன்படி, 2033 அக்டோபர் மாதம் வரை (10 ஆண்டுகள்) டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்