< Back
மாநில செய்திகள்
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
சென்னை
மாநில செய்திகள்

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தினத்தந்தி
|
18 Jun 2023 5:22 PM IST

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

பிரபல ரவுடி

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கிஷோர்(வயது 30). இவரது சொந்த ஊர் பொன்னேரி ஆகும். இவர், 2012-ல் செங்குன்றத்தில் டாஸ்மாக் கடை பாரில் வேலை செய்து வந்தார். இதனால் பாடியநல்லூருக்கு குடியேறினார்.

பிரபல ரவுடியான இவர் மீது செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும், புளியந்தோப்பில் வக்கீல் கொலை வழக்கும், மடிப்பாக்கத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கும் உள்ளது.

சமீபத்தில் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் பாலன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் இவருக்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

துப்பாக்கி முனையில் கைது

இதனால் கடந்த 3 மாதமாக கிஷோரை கைது செய்ய போலீசார் பலமுறை முயற்சித்தும் முடியாமல் இருந்து வந்தனர். இதை அறிந்த ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அருண், கிஷோரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று செங்குன்றம் அருகே பதுங்கி இருந்த ரவுடி கிஷோரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளியான அஜய்(24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ரவுடியான அஜய் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் செய்திகள்