திண்டுக்கல்
வருகிற 28-ந்தேதி சந்திர கிரகணம்; பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்
|வருகிற 28-ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.
அதன்படி, வருகிற 28-ந்தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களும் சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.