ராமநாதபுரம்
சந்திர கிரகணத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை
|சந்திர கிரகணத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ராமேசுவரம்,
சந்திரகிரகணம் நிகழ்வு மாலை 3.32 மணியில் இருந்து 5.50 மணி வரையிலும் ஏற்பட்டது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம்,தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மேகம் சூழந்து இருந்ததால் சந்திர கிரகணம் நிகழ்வு தெரியவில்லை. சந்திர கிரகணத்தையொட்டி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பகல் 1 மணி அளவில் நடை சாத்தப்பட்டது. வழக்கமாக பகல் 3 மணிக்கு திறக்கப்படும் நடை சந்திர கிரகணத்தையொட்டி மாலை 4.30 மணிக்கு கிரகணசாமி தங்க ரிஷப வாகனத்தில் வைக்கப்பட்டு கோவிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமி கோவிலுக்கு வந்த பின்னர் இரவு 7 மணிக்குமேல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். சந்திர கிரகணத்தையொட்டி பகல் 1 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலின் ரதவீதி சாலை மற்றும் உள்பகுதி சாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.