திருவள்ளூர்
பொன்னேரி நகராட்சி கூட்டம்: வளர்ச்சி பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு
|பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொன்னேரி நகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் பங்கேற்று பேசினார். இதில் பொன்னேரி நகராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் சார்பில் சாலைப் பணிகள், கலைஞர் மேம்பாட்டு நிதியின் மூலம் பூங்கா மேம்பாட்டுப் பணி செய்தல், எல்.பி.ஜி. மூலம் நவீன தகன மையம் அமைத்தல், நகராட்சி அலுவலக கட்டிட வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டவும், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் உயர் கோபுர மின் விளக்கு அமைத்தல், பஸ் நிலையத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உமாபதி, தனுஷா தமிழ் குடிமகன், நல்லசிவம், யாகோப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.