பொன்முடி பதவி விவகாரம்: கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கண்டனம்
|பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்காத கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என தி.மு.க. எம்.பி., வில்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது. இதனால் அவரது பதவி பறிபோனது. இதனிடையே ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார்.
பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார்.
இதனிடையே, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இயலாது என கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார். பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொன்முடி பதவிப்பிரமாண விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. எம்.பி., வில்சன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காத கவர்னரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். அரசமைப்பு சட்டத்திற்கு சிறிதும் மரியாதை அளிக்காமல் கவர்னர் மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறார். தீர்ப்பு, தண்டனைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், அந்த தண்டனை சட்டத்தின் பார்வையில் செல்லத்தக்கதல்ல.
எப்போது அவர், வேண்டுமென்றே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை மீறி நடக்கவும், அரசியலமைப்பு முறைகளைக் களங்கப்படுத்தவும், சட்டத்தின் விதிகளைப் புறக்கணிக்கவும் தலைப்பட்டாரோ அப்போதே அவர் தாம் வகிக்கும் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார்.
அரசியல் சாசனம், சட்டங்கள், சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் மீது அக்கறை இல்லாத கவர்னரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்துகிறேன்." என தெரிவித்துள்ளார்.