< Back
மாநில செய்திகள்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில்கேரள பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில்கேரள பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

தினத்தந்தி
|
20 March 2023 12:15 AM IST

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில்கேரள பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

மணவாளக்குறிச்சி:

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிகட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. மாசிக்கொடை விழா நாட்களில் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான கேரள பக்தர்கள் வேன், பஸ்களில் மண்டைக்காடுக்கு வந்தனர். அவர்கள் கடலில் கால் நனைத்து விட்டு பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். கேரள பக்தர்களின் வருகையால் மண்டைக்காடு கோவில் சன்னதி, கோவில் வளாகம், கடற்கரை மற்றும் பொங்கலிடும் பகுதியில் என அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதை தவிர குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களும் கோவிலை சுற்றியுள்ள தோப்புக்களில் குடும்பமாக பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். நாளை(செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை விழா நடக்கிறது. இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

---

மேலும் செய்திகள்