தர்மபுரி
பொங்கல் கரும்பு கொள்முதல்: வேளாண்மை இணை இயக்குனர், வயல்களில் நேரில் ஆய்வு
|பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் வயல்களில் வேளாண்மை இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் கரும்பை அந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்புகளை வயல்களில் கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காரிமங்கலம் வட்டாரத்தில் பொங்கல் கரும்பு கொள்முதல் பணி தொடர்பாக நேரடியாக வயல்வெளிக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்படி மாட்லாம்பட்டி, கன்னிப்பட்டி, ராஜி கொட்டாய், அந்தேரி கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் பணியை தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா பார்வையிட்டார். அப்போது கொள்முதல் செய்யப்படும் கரும்பின் தரம் குறித்து விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சங்கரநாராயணன், தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் தாம்சன், வட்டார வேளாண்மை அலுவலர் கனகராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் அன்பரசு, வேளாண்மை உதவி அலுவலர்கள் கிருஷ்ணன், சிவஞானம், மலர்விழி, அமராவதி கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் பாலமுரளி, முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.