விழுப்புரம்
பொங்கல் விளையாட்டு போட்டிகள்
|விழுப்புரம் பகுதியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர், சிறுமிகள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.
காணும் பொங்கலையொட்டி விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்கள் சார்பில் 12-ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் மகளிர்களுக்கு இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கோகோ, கோலப்போட்டிகளும், சிறுவர், சிறுமிகளுக்கு லெமன் ஸ்பூன், கபடி, சாக்கு ஓட்டப்பந்தயம், குறைந்த வேக சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளும் நடந்தன.
இப்போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், மகளிர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினார்கள். போட்டிகள் முடிவடைந்ததும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதேபோல் விழுப்புரம் அருகே நல்லரசன்பேட்டை, சகாதேவன்பேட்டை, சாலாமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விளையாட்டு போட்டிகளை நடத்தினார்கள். இதில் அறிவுத்திறன் போட்டிகள், கோலப்போட்டி, தவளை ஓட்டம், ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகள், குறைந்த வேக சைக்கிள் பந்தயம், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.