< Back
மாநில செய்திகள்
பொங்கல் தொகுப்பு: இன்று முதல் டோக்கன் விநியோகம்...!
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பு: இன்று முதல் டோக்கன் விநியோகம்...!

தினத்தந்தி
|
27 Dec 2022 9:46 AM IST

பொங்கல் பரிசுத்தொகுப்பை மக்கள் பெறுவதற்காக இன்றும், நாளையும் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு வினியோகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ள னர்.

பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கப்பட உள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த பணத்தை வாங்குவதற்கு மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுளில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா பி.எப்.7 தொற்று இந்தியாவிலும் நுழைந்துள்ளது.

கொரோனா முதல் அலை போன்று இந்த தொற்று உயிர் சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன. எனவே முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்று அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் புதிய வகை கொரோனாவுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடாத வகையில் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இன்றி அனைவரும் பெற்று செல்ல ஏதுவாக இன்றும் நாளையும் வீடுவீடாக சென்று டோக்கன் விநியோகிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி 2-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும் செய்திகள்