கள்ளக்குறிச்சி
4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி, மாடூர் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 976 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 77 குடும்பத்தினர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு தொகுப்பை வருகிற 14-ந்தேதி வரை ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம்.
மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்
எனவே குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பை அனைவரும் பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மீனா, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, துணைப்பதிவாளர் (பொது வினியோகத்திட்டம்) சுரேஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட அவைத்ததலைவர் ராமமூர்த்தி, நீலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், துணைத்தலைவர் அசோகன், நிறைமதி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பச்சமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ராதிகா சக்கரபாணி, மாடூர் ஒன்றிய கவுன்சிலர் தங்கத்தாமரை வண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.