கடலூர்
கடலூா் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் வினியோகம்:பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை தீர்க்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்கலெக்டர் தகவல்
|கடலூா் மாவட்டத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ள பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை தீர்க்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடலூா் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ரேஷன் கடைகள் மூலமாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 1.12.2022 அன்றைய தேதியின்படி நடைமுறையில் உள்ள 7 லட்சத்து 73 ஆயிரத்து 601 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 426 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேருக்கு வழங்கப்படுகிறது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு நாளை மறுநாள் முதல் 12-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும். பொதுமக்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை சிரமமின்றி எளிதாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரொருவர் வந்தாலும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
ஒரு நபருக்கு ஒரு பரிசு
எனவே, ரேஷன் கடையில் கூட்ட நெரிசல் ஏற்படும் வகையில் குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொங்கல் பரிசு வழங்கப்படும் விவரத்தை மின்னணு குடும்ப அட்டை வாயிலாக விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்த பின்னரே வழங்கப்படும். விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு தற்போது மின்னணு அட்டை இல்லாத இனங்களில் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் ஒருவரின் அசல் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது அங்கிகாரச்சான்று வழங்கப்பட்டிருப்பின் அதன் அடிப்படையில் பொங்கல் பரிசு வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு வழங்கப்படும் நாட்களில் ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும், விடுதலின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு, ஒரு குடும்ப அட்டைக்கு மேல் பொங்கல் பரிசு வழங்கப்படாது. எனவே, தவறான நபர்கள் ஆதாயம் பெறுவதை தடுக்க குடும்ப அட்டைதாரர்கள் தாங்கள் நேரடியாக டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாய விலைக்கடைக்கு சென்று பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தேதிகளில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பெற்றுக் கொள்ளலாம்.
கண்காணிப்பு அலுவலர்கள்
மேலும் பொங்கல் பரிசு தொடர்பாக புகார்கள் ஏதும் இருப்பின் அதனை தீர்வு செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் வட்ட, மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கட்டுப்பாட்டு அறையை (கலெக்டர் அலுவலகம்) 04142-230223 மற்றும் (இணை பதிவாளர் அலுவலகம்) -04142-284001 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரை 7338720401 என்ற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 9445000209 என்ற எண்ணிலும், 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் கூடுதல் தகவல்களை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.