திருவாரூர்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்
|பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்
திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்
திருவாரூர் தெற்குவீதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு செல்வராஜ் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
தமிழக மக்களின் நலன் காக்கின்ற வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில தமிழர்கள் தைத்திருநாளினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.
விடு்பட்டவர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும்
திருவாரூர் மாவட்டத்தில் முழுநேர ரேஷன் கடைகள் 579, பகுதி ரேஷன் கடைகள் 167 என மொத்தம் 746 ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 3 லட்சத்து 24 ஆயிரத்து 35, எ.ஏ.ஓய். குடும்ப அட்டைதாரர்கள் 60 ஆயிரத்து 486, ஓ.ஏ.பி. குடும்ப அட்டைதாரர்கள் 5,591, என்.பி. குடும்ப அட்டைதாரர்கள் 163, காவலர் குடும்ப அட்டைதாரர்கள் 861 என மொத்தம் 3 லட்சத்து 91 ஆயிரத்து 136 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும் பொங்கல் பரிசுதொகுப்புகள் வழங்கிட ஏதுவாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளொன்றுக்கு 200 முதல் 250 வரை டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புகள் நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை காலை 9 முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் வழங்கப்படும். 13-ந் தேதி அன்று விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், உதவி கலெக்டர் சங்கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர்மன்ற துணை தலைவர் அகிலாசந்திரசேகர், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவுமொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் கலியபெருமாள், நகரமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.