ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் வினியோகம் தொடங்கியது
|பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்க பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
சென்னை,
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்க பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் நேற்று வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்கள் வழங்கப்பட்டது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கன்களை வழங்கினர்.
பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டையை காண்பித்து டோக்கன்களை பெற்றுக்கொண்டனர். பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் கடையின் பெயர், டோக்கன் எண், பொருட்களை வாங்க வர வேண்டிய தேதி ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் டோக்கன் எண் அடிப்படையிலேயே வந்து பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வர வேண்டும் எனவும், முன்கூட்டியே வரவேண்டாம் எனவும் பொதுமக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
டோக்கன் வழங்கும் பணி நாளை (9-ந் தேதி) வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.