பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
|பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைச்சாற்றும் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
தொடக்கத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த திட்டம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் வழக்கமான பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி உதயமானது. பொங்கல் பரிசு பணம் ஏலத்தொகை போன்று ஏறி வந்திருந்த நிலையில் தி.மு.க. ஆட்சியில் என்ன பரிசு தொகுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எகிறி இருந்தது.
ஆனால் தமிழக அரசின் நிதி மற்றும் கடன் சுமையை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை.
ரொக்கப் பணத்துக்குபதிலாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்கள் தரம் குறைந்திருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தமிழக அரசுக்கு கசப்பான அனுபவத்தை தந்தது.
2023-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் ரூ. 1,000 ரொக்கம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.