பொங்கல் பண்டிகை: கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள், காய்கறிகள் விற்பனை மும்முரம்...!
|பொங்கல் பண்டிகையையொட்டி சந்தைகளில் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, மஞ்சள் கொத்து ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், இஞ்சி கொத்து ரூ.100 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வீட்டில் கட்டப்படும் பொங்கல் தோரணம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் காய்கறிகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அதன்படி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிலோ ரூ.30, பிடிகருணை கிழங்கு கிலோ ரூ.40, சிறு கிழங்கு கிலோ ரூ.80, மொச்சை கிலோ ரூ.60, வெற்றிலை வள்ளிக்கிழங்கு கிலோ ரூ.60, பட்டாணி கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், வாழை இலை, அரிசி, வெல்லம், நெய், பழங்கள், பூக்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையை போன்றே பிற மாவட்டங்களிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச்செல்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சந்தைகளில் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.