பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
|அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக செல்கின்றன. குறிப்பாக புதியதாக திறக்கப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூடியுள்ளனர். தங்களது சொந்த ஊர்களான குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் அதிகளவிலான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க போக்குவரத்துக்கு போலீசார் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிங்கபெருமாள் கோவில் சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. மேலும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.