பொங்கல் பண்டிகை: கோவை-தாம்பரம் சிறப்பு ரெயில் அறிவிப்பு; பயணிகள் மகிழ்ச்சி
|பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரெயில்களின் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் மக்கள் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.
இதன்படி, தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோன்று, கோவையில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதுதவிர, திருச்சி முதல் பெங்களூருவுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
பெங்களூரு முதல் திருச்சிக்கு, வருகிற 12-ந்தேதியும், திருச்சி முதல் பெங்களூருவுக்கு 13-ந்தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்து உள்ளது. பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரெயில்களின் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இதனால், பயணிகள் அதிக மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.