< Back
மாநில செய்திகள்
வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா
சிவகங்கை
மாநில செய்திகள்

வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா

தினத்தந்தி
|
9 Aug 2022 5:42 PM GMT

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

பொங்கல் திருவிழா

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், அ. காளாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குல தெய்வமாக வழிபடும் வடக்கு வாசல் செல்வி அம்மனுக்கு ஆடி பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமான திடலில் கிராம பொதுமக்கள் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு ஆங்காங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய பொங்கல் வைக்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

சிறப்பு அபிஷேகம்

இந்த விழா மாலை வரை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் வண்ணமலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் அ.காளாப்பூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

11 பவுன் திருட்டு

இந்த பொங்கல் விழாவை காண அ.காளாப்பூரை சேர்ந்த சந்திரன் மனைவி கல்பனா (வயது 65) தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தார். இதையொட்டி அவர் கோவில் உள்ளே சென்று விட்டு வெளியே வந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் செயினை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்