பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் இதுவரை 6.54 லட்சம் பேர் பயணம்
|கடந்த 12-ம் தேதி முதல் தற்போது வரை 11,284 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டினர். நீண்ட விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதற்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அந்த வகையில், கடந்த 12-ம் தேதி முதல் தற்போது வரை 11,284 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை கிளாம்பாக்கம் மற்றும் பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் இதுவரை 6.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும், சொந்த ஊர் செல்வதற்காக இதுவரை 2.44 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.