பொங்கல் பண்டிகை: கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் பறக்கும் 600 கிலோ கரும்பு
|பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு 600 கிலோ கரும்பு விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
கோவை,
பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஷார்ஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கரும்பு கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்ல புக்கிங் செய்யப்படுகிறது.
இன்று முதல் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்படுகிறது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. முழு கரும்பு கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படுவதால், மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் 400 கிலோ குறைத்து, 600 கிலோ கரும்பு மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.