கள்ளக்குறிச்சி
பாலிடெக்னிக் மாணவர் தீக்குளிப்பு?
|உளுந்தூர்பேட்டை அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை
மாணவர்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள விஜயங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சந்தோஷ்குமார்(வயது 17). இவர் பண்ருட்டி அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் சந்தோஷ்குமார் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது அவரை அவரது தாய் திட்டியதாக தெரிகிறது. இதனால் தாயிடம் கோபித்துக்கொண்டு சந்தோஷ்குமார் வீட்டை விட்டுவெளியேறினார்.
உயிருக்கு போராடினார்
இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சந்தோஷ்குமார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சந்தோஷ்குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.