கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும்.. வாக்களித்த பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
|ராமநாதபுரம் தொகுதியில் உறுதியாக வெற்றிபெறுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தேனி,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் காலையில் இருந்தே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல் அமைச்சரும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
"நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்த மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக வெற்றிபெறுவேன். அதிமுக உறுதியாக எங்கள் பக்கம் வந்துசேரும். 2026ல் அம்மாவின் ஆட்சியை உறுதியாக நாங்கள் அமைப்போம். கருத்துக்கணிப்புகள் அனைத்து பொய்யாகும் தேர்தலாக இது அமையும்."
இவ்வாறு அவர் கூறினார்.