கடலூர்
விருத்தாசலத்தில் வாக்குச்சாவடி மையங்களை பிரிப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
|விருத்தாசலத்தில் வாக்குச்சாவடி மையங்களை பிரிப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆயிரத்து 500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடி மையங்களை பிரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு சப்-கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், தாசில்தார்கள் விருத்தாசலம் தனபதி, திட்டக்குடி கார்த்திக், வேப்பூர் மோகன், தேர்தல் தலைமையிடத்து துணை தாசில்தார் விருத்தாசலம் வேல்முருகன், திட்டக்குடி ஜெயச்சந்திரன், வேப்பூர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2 வாக்குச்சாவடிகள்
கூட்டத்தில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பூந்தோட்டம் மற்றும் சாவடிகுப்பம் ஆகிய வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரித்து மேலும் 2 வாக்குச்சாவடி மையங்களை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டு, தேசிய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் கருத்து கேட்கப்பட்டது.
திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாக்களில் வாக்கு சாவடி மையங்கள் புதியதாக எதுவும் அமைக்கப்படவில்லை. பழைய நிலையிலேயே செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் கருத்துகள் கேட்கப்பட்டது.
இதில் தேர்தல் பிரிவு கணினி இயக்குனர் சுரேஷ், உதவியாளர் நரேஷ் முகுந்தன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, அ.தி.மு.க. செந்தில், தே.மு.தி.க. நகர துணை செயலாளர் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி ரஞ்சித், பா.ஜ.க. முருகவேல், மார்க்சிஸ்ட் லெனின்ஸ்டு கட்சி கந்தசாமி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.